செய்திகள்
சதுரகிரி மலையில் பக்தர்கள்

சதுரகிரி மலையில் 4 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு

Published On 2019-08-01 05:34 GMT   |   Update On 2019-08-01 05:34 GMT
ஆடி அமாவாசை விழாவிற்காக சதுரகிரி வந்த 4 பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

மதுரை மாவட்டம் சாப்டூர், பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

இங்கு வருடந்தோறும் ஆடி அமாவாசை திரு விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 27-ந் தேதி முதல் இன்று வரை மொத்தம் 6 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி வருகை தந்தனர். அமாவாசை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

சங்கிலி பாறை, வழுக்கல் பாறை பகுதிகளை கடக்க பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் வழுக்கி விழுந்து விடாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கூட்ட நெரிசலை சீர் செய்து பக்தர்கள் மலையேற உதவி செய்தனர்.

மலையேற பக்தர்களுக்கு சுமார் 2 மணி நேரம் வரை ஆனது. இந்த நிலையில் குடும்பத்தினருடன் வந்த மதுரை ஜீவாநகர் முருகேசன் (வயது 60) திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் மாரடைப்பால் அவர் இறந்தார்.

திருமங்கலம் அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் தாணிப்பாறை அடி வாரத்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இதேபோல் நெல்லை பேட்டை ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்த முத்துக்குட்டி மனைவி சுசீலா (65) என்பவரும் சதுரகிரி மலையடிவாரம் தாணிப்பாறை தோட்டத்தில் இருந்தபோது மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆஸ்பத்திரிககு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுசீலா இறந்தார். உசிலம்பட்டி ராஜசேகர் என்பவரும் சதுரகிரி மலைக்கு வந்தபோது மாரடைப்பால் இறந்தார்.

கடந்த 27-ந்தேதி முதல், இன்றுவரை 4 பக்தர்கள் பலியாகி இருப்பது சதுரகிரி பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News