செய்திகள்
குட்டி விமானம் (கோப்பு படம்)

இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு

Published On 2019-07-27 19:49 GMT   |   Update On 2019-07-27 19:49 GMT
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) வளாகம் உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு இஸ்ரோ மைய வளாகத்தின் மேல் மர்மமான முறையில் குட்டி விமானம் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 500 மீட்டர் உயரத்தில் அந்த விமானம் பறந்ததாகவும், அதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பார்த்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இஸ்ரோ அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக் டர் ரவீந்திரன் எழுத்துப்பூர்வமாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததாக கூறப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2015-ம் ஆண்டு இதேபோன்று விமானம் பறந்ததாக வந்த தகவலின்பேரில் அங்குள்ள மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதேபோல் 2017-ம் ஆண்டும் குட்டி விமானம் பறந்ததாக இஸ்ரோ சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News