செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வட தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2019-07-26 22:23 GMT   |   Update On 2019-07-26 22:23 GMT
சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெப்பம் குறைந்து மேகமூட்டமான வானிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடகா பகுதிகளில் வலுவாக உள்ளது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு(இன்று) வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் 89 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பான மழை அளவு 117 மி.மீட்டர் ஆகும். இது இயல்பை விட 24 சதவீதம் குறைவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 9 செ.மீட்டர் மழையும், திருப்பத்தூர், ஆரணியில் தலா 8 செ.மீட்டர் மழையும், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 7 செ.மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

போளூர், தாம்பரம், விரிஞ்சிபுரம், சத்யபாமா பல்கலைக்கழகம், வந்தவாசி, கோளப்பாக்கம், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீட்டரும், வால்பாறை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், வேலூர், மதுராந்தகம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீட்டரும், மணமேல்குடி, பூந்தமல்லி, குடியாத்தம், காஞ்சீபுரம், கேளம்பாக்கம், காவிரிப்பாக்கம், செய்யாறு, சென்னை விமான நிலையம், பூந்தமல்லி, புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, வடசென்னை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News