செய்திகள்
கைதி தப்பி ஓட்டம்

திருச்சி ஜெயிலில் இருந்து நைஜீரிய நாட்டு கைதி திடீர் தப்பி ஓட்டம்

Published On 2019-07-19 17:11 GMT   |   Update On 2019-07-19 17:11 GMT
திருச்சி சிறையில் இருந்து நைஜீரியா நாட்டு கைதி தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி மத்திய சிறை வளாகத்திலேயே அகதிகள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கான சிறையும் உள்ளது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங் களில் தொடர்புடைய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் குறிப்பாக நைஜீ ரியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பங்களாதேஷ்  நாட்டை சேர்ந்த 14 பேர் தண்டனை காலம் முடிவுற்றதையடுத்து விடுதலை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது இந்த சிறையில் 40 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் (வயது 28) என்பவர் ஏ.டி.எம். கொள்ளை மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளை கணக்கெடுத்தனர். அப்போது ஸ்டீபன் மட்டும் மாயமாகி இருந்தார். சிறை வளாகம் முழுவதும் தேடியும் அவரை  காணவில்லை. அதன்பிறகுதான் அவர் தப்பி ஓடியது தெரிந்தது. சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு ஸ்டீபன் எப்படி தப்பினார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி சிறையில் இருந்து நைஜீரியா நாட்டு கைதி தப்பியது குறித்து சிறை போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஸ்டீபனை தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News