செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன? தமிழக சட்டசபையில் காரசார விவாதம்

Published On 2019-07-17 07:06 GMT   |   Update On 2019-07-17 07:06 GMT
சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. 

இந்த தீர்மானத்தின் மீது  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது,  “திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி.  நீட் விவகாரத்தில் மீண்டும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார்.



அதன்பின்னர் நீட் தேர்வு  விலக்கு மசோதா தொடர்பாக  தமிழக  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் அளித்து பேசியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில்  தமிழக அரசு எந்த தகவலையும் மறைக்கவில்லை.  நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் தெரிந்தால் தான்  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும்.   

நீட் தேர்வு மசோதா  தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு 12 கடிதம் அனுப்பி உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின்  வழக்கு தொடருவது குறித்து  முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

அதன்பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “நீட் தேர்வு விவகாரத்தில்  சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக அரசு  தயாராக உள்ளது. மசோதாக்களை  மத்திய அரசு நிராகரித்ததற்கு என்ன  காரணம் என்று  தெரியவில்லை. பிரதமரை சந்தித்தபோது எல்லாம் நீட்தேர்வு விலக்கு மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்தேன்” என்றார்.
Tags:    

Similar News