செய்திகள்
கைது

ஆண்டிபட்டியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

Published On 2019-07-16 10:29 GMT   |   Update On 2019-07-16 10:29 GMT
ஆண்டிபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி நந்தினி.இருவரும் அப்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் கடந்த மே.19-ந்தேதி கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கிராமத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் நாடகம் நடைபெற்றது.இதற்காக பாலகிருஷ்ணன் கோவிலுக்கு சென்று விட்டார்.

வீட்டில் நந்தினி தனியாக இருந்தார்.நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் நந்தினி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆண்டிபட்டி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வைகை அணை சாலை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் தேனி அருகே அரண்மனைபுதூரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் வீரக்குமார்(25) என்பது தெரிய வந்தது.மேலும் விசாரணையில் நந்தினியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவரிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீஸ் வீரக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News