செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-07-16 09:29 GMT   |   Update On 2019-07-16 09:29 GMT
கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.

இதனால் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், ஆண்டு ஒன்றுக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.

விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசுகளில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய் 60 காசுகளில் இருந்து, 24 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.



பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசுகளில் இருந்து, 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளிலிருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று, விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து, 12 ரூபாய் 16 காசுகளாக அம்மாவின் அரசால் உயர்த்தி வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித்தொழிலாளர்கள் சுமார் 11 கோடியே 23 லட் சம் ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.

வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் “தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா’’ அமைக்கப்படும்.

தென்னை அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமான கன்னியாகுமரியில் தென்னை மதிப்புக்கூட்டும் மையம் ஒன்று 16 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News