செய்திகள்
கொள்ளை

கன்னியாகுமரி அருகே கோவில் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை

Published On 2019-07-10 15:12 GMT   |   Update On 2019-07-10 15:12 GMT
கன்னியாகுமரி அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை பகுதியில் கொல்லத்து மூர்த்தி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இது தவிர மற்ற நாட்களில் கோவிலில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். கோவில் நிர்வாகி ஸ்ரீராமச்சந்திரன் தினமும் மாலையில் சென்று கோவிலை சுத்தம் செய்து அன்றாட பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவில் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்று உள்ளனர். மேலும் கோவிலில் இருந்த 4 குத்துவிளக்குகள், 3 வெங்கலத் தட்டுகள், கோவில் மணி, பூஜை பொருட்கள் மற்றும் கோவிலின் முன் பக்க கதவையும் கழற்றி சென்று உள்ளனர்.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா? எனவும் அதில் கொள்ளையர்களின் உருவம் பதிந்து உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம், உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News