செய்திகள்

மீஞ்சூர் அருகே 17 ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்திய மர்மகும்பல்

Published On 2019-06-25 06:40 GMT   |   Update On 2019-06-25 06:40 GMT
மீஞ்சூர் அருகே 17 ஆழ்துளை கிணறுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள சிறுவாக்கம் கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து சிறுவாக்கம் அனுப்பம்பட்டு, நாலூர், காணியம்பாக்கம், தேவதானம், வேலூர், மெரட்டூர், நெய்தவாயல், வாயலூர், திருவெள்ளை வாயல், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மேலூர், வல்லூர் ஊராட்சிகளுக்கும் மீஞ்சூர் பேரூராட்சி பகுதி முழுவதும் அரசின் குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் சேமித்து அந்தந்த ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பி அதன் பிறகு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மின்தடை ஏற்பட்டபோது மர்ம நபர்கள் கொசஸ்தலை ஆற்றில் உள்ள 17 ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தியும் அதில் இருந்த விலை உயர்ந்த பித்தளையால் ஆன வால்வு பொருட்களை திருடியும் சென்றுவிட்டனர். இதனால் நேற்று காலை திடீரென 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் அமலதீபன், வருவாய் மண்டல துணை தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் சேதப்படுத்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டனர். உடனடியாக அவை சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன், பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி, மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் அமலதீபன் அதிகாரிகள் ஆகியோர் சேதப்படுத்தப்பட்ட 17 ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பித்தளை வால்வுகள் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய திட்ட செயலாக்க உதவி பொறியாளர் அமல தீபன் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். 15 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News