செய்திகள்
வந்தவாசியில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தண்ணீர் பிடிக்க கூடாது என்று பெண் சாமியாடி கூறியதால் பரபரப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-06-18 11:13 GMT   |   Update On 2019-06-18 11:13 GMT
வந்தவாசி அருகே கோவில் பைப்பில் தண்ணீர் பிடிக்க கூடாது என்று பெண் சாமியாடி கூறியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூரில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் வளாகத்தில் கைப்பம்பு கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கைப்பம்பில் உள்ள குடிநீர் சுவையாக இருக்கும். தற்போது அந்த பகுதியில் குடிதண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் கிராமத்தில் உள்ள அனைவரும் கோவில் வளாகத்தில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அருள் வந்து சாமியாடினார். அப்போது ஒரு பிரிவினர் கோவிலில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்து செல்வதால்தான் மழை பெய்யாமல் உள்ளது.

அவர்களை தண்ணீர் பிடிக்க அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.

இதனால் கோவில் பூசாரி கருணா என்பவர் பெண் சாமியாடி அருள் கூறியதால் பூஜை செய்த பின்னர் தண்ணீர் பிடிக்கலாம் என ஒரு பகுதியினரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க அனுமதிக்க கோரி வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மாணவிகள் விடுதி முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், தாசில்தார் அரிக்குமார், பி.டி.ஓ. பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோவில் பகுதியில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் பிடிக்க எந்த தடையும் இல்லை. யாரும் உங்களை தடுக்கமாட்டார்கள் அப்படி தடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News