செய்திகள்

திருமங்கலம் அருகே போலீஸ்போல் நடித்து அபராதம் வசூலித்தவர் கைது

Published On 2019-06-14 11:18 GMT   |   Update On 2019-06-14 11:18 GMT
போலீஸ் உடை அணிந்து கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் வசூலித்தவரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஒரு போலீஸ்காரர் வாகனங்களை மறித்து சோதனை செய்தார்.

அப்போது ஆவணங்கள் இல்லாத நபர்களிடம் கடும் கெடுபிடி விதித்து அபராத தொகை வசூலித்தார். ஆனால் அவரது நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். அந்த நபரிடம் அடையாள அட்டையும் இல்லை.

இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அந்த நபரிடம் உரிய முறையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சிந்து பட்டி அருகே உள்ள எரமலைப்பட்டியைச் சேர்ந்த பீட்டர் ராமன் (வயது 47) என தெரியவந்தது. இவர் போலீஸ் உடை அணிந்து அடிக்கடி வாகன சோதனை நடத்தி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News