செய்திகள்

புளியந்தோப்பில் துப்பாக்கி முனையில் 5 ரவுடிகள் கைது

Published On 2019-06-13 09:15 GMT   |   Update On 2019-06-13 09:15 GMT
புளியந்தோப்பில் துப்பாக்கி முனையில் 5 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

புளியந்தோப்பு கே.எம். கார்டனை சேர்ந்தவர் நவீன்குமார், ஏ.சி. மெக்கானிக்.

நேற்று இரவு நவீன்குமார் புளியந்தோப்பு சிவராஜ் சாலை நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதனால் அவருக்கும் காரில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காரில் இருந்த 5 பேர் நவீன் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர்.

அதிலிருந்த ஒருவர் ‘நான் தான் ரவுடி ஜங்கிலி கணேஷ், பல கொள்ளை, கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். போலீசில் புகார் செய்தால் வீட்டுக்கே வந்து கொலை செய்வோன்’ என்று மிரட்டினார். உடன் இருந்தவர்களும் மிரட்டினார்கள்.

இது குறித்து நவீன்குமார் புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து, கத்தி முனையில் பணம் பறித்தவர்களை தேடி வந்தார்.

இந்த நிலையில் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் ஜங்கிலி கணேசும், அவரது கூட்டாளிகளும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி அங்கு சென்று துப்பாக்கி முனையில் 5 பேரையும் மடக்கி பிடித்தார். ஜங்கிலி கணேசுடன் இருந்தவர்கள் வியாசர்பாடி சூர்யா, சூளை குமார், செந்தில், கொளத்தூர் பாலமுருகன் என்பது தெரியவந்தது.

இந்த ரவுடி கும்பல் குடியாத்தத்தை சேர்ந்த தொழில் அதிபர் பத்மநாபன் என்பவரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

வழிப்பறி செய்யும் போது வைத்திருந்த 2 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட 5 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News