செய்திகள்

சரபங்கா ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2019-06-08 06:02 GMT   |   Update On 2019-06-08 06:02 GMT
சேலம் மாவட்டத்தில் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை இன்று காலை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரை 2-ஆக பிரிக்கும் வகையில், நகரின் மத்தியப் பகுதியில் சரபங்கா ஆறு அமைந்துள்ளது.

ஆற்றின் மறுகரையில் உள்ள கவுண்டம்பட்டி, சக்திநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக மிகுந்த சிரமத்துக்கு இடையே ஆற்றினை கடந்து, மறுகரையில் உள்ள வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். குறிப்பாக, மழைக் காலங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் ஆற்றினை கடக்க இயலாமல் நீண்ட தொலைவு நடந்து சென்று மறுகரையினை அடைந்து வந்தனர்.

இந்த நிலையினை அறிந்த தமிழக அரசு கவுண்டம்பட்டியிலிருந்து சேலம் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.2கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைத்திட நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது. தற்போது பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த புதிய பாலத்தை இன்று காலை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர், எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் உள்ள பயணியர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார்.

புதிய பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாக எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாமி தரிசனம் செய்தார். அவருக்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் டி.கதிரேசன் தலைமையிலான அறங்காவல் குழுவினர் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

Tags:    

Similar News