செய்திகள்

வேகமாக குறைந்து வரும் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2019-05-06 11:50 GMT   |   Update On 2019-05-06 11:50 GMT
கோடை மழை ஏமாற்றி வருவதால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. #MullaperiyarDam
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 100 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து 112.55 அடியாக உள்ளது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது. இதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தண்ணீர் திறக்கப்படாததால் குறைந்த அளவு தண்ணீரையே தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் பயன்படுத்த முடியும் என்பதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்படுவதால் வைகை அணைக்கு 3 கனஅடி நீரே வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 38.06 அடியாக குறைந்துள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.30 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 97.18 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
Tags:    

Similar News