செய்திகள்

திருவையாறு அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2019-03-28 11:44 GMT   |   Update On 2019-03-28 11:44 GMT
திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
திருவையாறு:

திருவையாறை அடுத்த அம்மன்பேட்டை தெற்குத்தெருவை சேர்ந்த யேசுதாஸ் மகன் தர்மபிரபு (23). இவர் சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார்.

இவர் அம்மன்பேட்டை அருகே வெட்டாற்றில் அரசு அனுமதியில்லாமல் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு மணக்கரம்பை மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனே மாட்டு வண்டியை பறிமுதல் செய்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து தர்மபிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருவையாறை அடுத்த மணக்கரம்பை புது பைபாஸ் ரோட்டில் வந்த மினிலோடு வேனை மறித்தபோது அதிலிருந்து டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

மினி லோடு வேனை சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலோடு வேனை பறிமுதல் செய்து லாரி உரிமையாளரையும், டிரைவரையும் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News