செய்திகள்

குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

Published On 2019-03-07 17:52 GMT   |   Update On 2019-03-07 17:52 GMT
மஞ்சாநாயக்கன்பட்டி கடை வீதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்:

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் காணியாளம்பட்டி அருகே உள்ள மஞ்சாநாயக்கன்பட்டி, ராசங்கோவிலூர் ஆகிய குக்கிராமங்களிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவைக்காக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

மேலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி நீரும் அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந் மின் மோட்டார் பழுதானதால் அதனை சரிசெய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் கழற்றி செல்லப்பட்டது. இதனால் காவிரி நீரை மட்டுமே அப்பகுதி மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் காவிரி நீரும் கடந்த ஒருவார காலமாக அந்த பகுதிக்கு வரவில்லை.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் நடவடிக்ககை எடுக்கப்பட வில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மேற்கண்ட கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை மஞ்சாநாயக்கன்பட்டி கடை வீதியில் ஒன்று கூடி கரூர்- மணப்பாறை சாலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன், ஊராட்சி செயலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News