செய்திகள்

பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் - விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை

Published On 2019-02-24 18:07 GMT   |   Update On 2019-02-24 18:07 GMT
பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் விளையாட்டு விடுதியை சேர்ந்த மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்ற உறுதிமொழியுடன் மத்திய- மாநில அரசுகள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை சார்பில் மாவட்ட அளவில் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூரமாரத்தான் ஓட்டம் பெரம்பலூரில் நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அதிகாலை தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை தமிழ்செல்வன் எம்.எல.ஏ. முன்னிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறுமிகள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது இலக்கை நோக்கி ஓடினர். இந்த மாரத்தான் பாலக்கரை, சங்குப்பேட்டை, கடைவீதி, அரணாரை வழியாக சென்று மீண்டும், கடைவீதி, சங்குப்பேட்டை,விளாமுத்தூர் சாலை வழியாக பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நிறைவடைந்தது.



இதில் பெரம்பலூர் விளையாட்டு விடுதியை சேர்ந்த தடகள வீராங்கனைகளும், பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுமான கிருத்திகா முதல் இடத்தையும், தன்யா 2-ம் இடத்தையும், சிவஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா விளையாட்டு வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.7 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரமும் மற்றும் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார்.

மேலும் 4-ம் இடம் பிடித்த மாணவிக்கு ரூ.3 ஆயிரமும், 5-ம் இடம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரமும், 6-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.ஆயிரமும், 11-ம் இடம் முதல் 25-ம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.300-ம், 25-ம் இடம் முதல் 50-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.200-ம் பரிசுத்தொகையாக வழங்கி கலெக்டர் பாராட்டினார். மேலும் மாரத்தானில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

இதில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி (பொறுப்பு) பூங்கொடி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராம சுப்பிரமணியராஜா, தடகள பயிற்றுனர் கோகிலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News