செய்திகள்

தேசிய-மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2019-02-10 11:18 GMT   |   Update On 2019-02-10 11:18 GMT
தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #ADMK

தேனி:

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய - மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எதுவும் கூற முடியாது. கூட்டணி குறித்து உடன்பாடு ஏற்பட்டவுடன் அறிவிக்கப்படும். எங்களிடம் பல்வேறு கட்சியினர் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் திரும்ப வர வேண்டும். இதற்கான ஞானம் அவர்களுக்குத்தான் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் கூறாமல் சென்று விட்டார்.

முன்னதாக தேனியில் நடந்த அரசு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் 14 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன. தற்போது 6 லட்சம் வீடுகளை கட்டிடங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. தேனி மாவடடத்தில் 4 ஆயிரம் குடிசை வீடுகள் ஒரு வருடத்தில் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றித்தரப்படும்.

ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.11 லட்சம் ஆகும். பயனாளி மற்றும் மத்திய அரசின் பங்கு தலா ரூ.1.50 லட்சம் தமிழக அரசு சார்பில் ரூ.8 லட்சம் வழங்கப்படும். நீண்ட நாட்கள் பயனளிக்கும் வகையில் தமிழகத்தில் பெண்கள் ஒவ்வொருவருக்கும் நலத்திட்ட உதவிகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அதே வழியில் தற்போது அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே பெண்கள் ஆதரவு எப்போதும் தமிழக அரசுக்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார். #OPS #ADMK

Tags:    

Similar News