செய்திகள்

ஓசூர் அருகே மாடுகள் திருவிழா தொடங்கியது

Published On 2019-02-02 16:55 GMT   |   Update On 2019-02-02 16:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாடுகள் திருவிழா தொடங்கியது. இதனை ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் தொடங்கி வைத்தார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா ஆவலப்பள்ளி அருகே கெலவரப்பள்ளி அணை பக்கமுள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஆண்டு தோறும் ஸ்ரீசப்ளம்மா தேவி கோவில் விழாவையொட்டி மாடுகள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மாடுகள் திருவிழா தற்போது தொடங்கியது. இதனை, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.  கோபிநாத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சப்ளம்மா தேவிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தி பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் விழாவை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. 

மாடுகள் திருவிழா, வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு, விற்பனைக்காக ஏராளமான மாடுகளும் அழைத்து வரப்பட்டுள்ளன.

மேலும் இந்த விழாவில், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராதா கஜேந்திர மூர்த்தி மற்றும் ராஜாரெட்டி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நாராயணப்பா (முத்தாளி), ராமச்சந்திரப்பா (கெலவரப்பள்ளி) மற்றும் கிராம பிரமுகர்களும், விழா குழுவினரும் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News