செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் பணிக்கு திரும்பாத 39 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

Published On 2019-01-31 10:38 GMT   |   Update On 2019-01-31 10:38 GMT
வேலூர் மாவட்டத்தில் பணிக்கு திரும்பாத 39 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #jactogeo
வேலூர்:

வேலூர் மாவட்ட அரசு, தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் உள்ள 18,200 ஆசிரியர்களில் 8,100 பேர் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 6000 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை நீடித்தது. இதனால் பல இடங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து காலை முதலே ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

அதேசமயம், வேலூர் மாவட்டத்தில் 39 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பாதது தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று காலை 10 மணி வரை பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் விவரம் பெறப்பட்டது. இதில் 39 ஆசிரியர்கள், சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து அந்த 39 ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர். மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் பணியில் சேர இயலாது என்றார். #jactogeo

Tags:    

Similar News