செய்திகள்

ஊட்டியில் புகைப்பட கண்காட்சி - மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்

Published On 2019-01-12 18:02 GMT   |   Update On 2019-01-12 18:02 GMT
ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
ஊட்டி:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜான் சல்லீவன் என்பவரால் கடந்த 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததால், மாவட்டத்தில் வாழ்ந்த ஆதிவாசி மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டது. நீலகிரி கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில், ஊட்டி நகரின் பழைய புகைப்பட கண்காட்சி ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கலந்துகொண்டு, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வரலாறு மற்றும் சுற்றுலா பாடப்பிரிவு எடுத்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீலகிரி மாவட்டத்தின் வரலாறு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி கூறினார். அப்போது, நீலகிரியை சுற்றுலா மாவட்டமாக மேலும் மேம்படுத்த மாணவ-மாணவிகள் தனியாக இணையதளம் உருவாக்கி, நீலகிரியின் முக்கிய இடங்கள், வரலாறுகள், வனவிலங்குகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அப்போது தான் சுற்றுலா கல்வி, வரலாறு பயிலும் மாணவர்கள் நீலகிரியை தேடி வருவார்கள். நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்த ஜான் சல்லீவனுக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவிற்கு, நீலகிரியின் 200-வது ஆண்டு என்ற பெயரிட வேண்டும். இதன் மூலம் ஊட்டிக்கு வரும் வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் ஜான் சல்லீவன் குறித்து தெரிந்துகொள்ள முடியும் என்றார். கண்காட்சியில் ஊட்டி புனித ஸ்டீபன் ஆலயம், நகராட்சி மார்க்கெட், ஏரி, குதிரை பந்தய மைதானம், சேரிங்கிராஸ் மற்றும் இருளர், தோடர், பனியர் போன்ற ஆதிவாசி மக்கள், அவர்களது குடிசைகள், ஜான் சல்லீவன் உள்பட பல்வேறு பழமையான புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இதனை கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர். புகைப்பட கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News