செய்திகள்

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் - வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் நாளை பிரேத பரிசோதனை

Published On 2019-01-01 05:52 GMT   |   Update On 2019-01-01 05:52 GMT
எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாளை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
மதுரை:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

விசாரணையில் கர்ப்பிணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் அந்த வாலிபர் மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.



உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளது. எனவே பிற மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வாலிபரின் தாயார் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். பின்னர் அவர் எய்ட்ஸ் பாதிப்பில் இறந்த வாலிபரின் உடலை நெல்லை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியின் 2 தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மதுரை அரசு மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

அதுவரை எச்.ஐ.வி. கிருமிகள் பரவாமல் தடுக்க உடலை பாலித்தீன் கவரால் மூடி பாதுகாக்க வேண்டும். பிரேத பரிசோதனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி நாளை எச்.ஐ.வி. பாதிப்பில் இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
Tags:    

Similar News