search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்ஐவி பாதிப்பு"

    எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணிடம் இருந்து 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்ட மூத்த மகளை, அவரிடமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஒப்படைத்தனர். #HighCourtMaduraiBench #HIVBlood
    மதுரை:

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ்மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எச்.ஐ.வி. பாதித்த பெண்ணை நேரில் அழைத்து தனி அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னுடைய மூத்த மகளை 2 மாதமாக பார்க்காமல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மூத்தமகள் ஆகியோரை ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி அவர்களும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதிகளின் தனி அறையில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும், மூத்த மகளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று (நேற்று) ஆஜராகினர். பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததும், அவரது கணவர் சேர்ந்து வாழ முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தன்னை பார்த்துக்கொள்ள மாட்டார் என்று அந்த பெண் தெளிவாக கூறியுள்ளார்.

    தற்போது தன் குழந்தைகளுடன் அந்த பெண் தனது பெற்றோருடன் இருந்து வாழ்நாளை கழிக்க விரும்புகிறார். அங்கு தனது கணவர் வந்து பார்க்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனவே 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுமி, அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இந்த வழக்கில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் மனநலத்துறை உதவி பேராசிரியர் கீதாஞ்சலி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, வேலை, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் கேட்டு, அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனுக்கு உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜராக, வக்கீல் ஆர்.வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணத்தை சுகாதாரத்துறை செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களே உரிய முடிவை எடுக்கலாம். இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #HighCourtMaduraiBench  #HIVBlood
    அரசு மருத்துவக்கல்லூரி டீன் வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டதால், எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. #HIVBlood
    மதுரை:

    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று வெளிமாவட்ட டாக்டர்களால் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வீடியோவில் அதனை பதிவு செய்யும் பணிக்கான ஏற்பாடுகள் முடிவடையாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அந்த பெண் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார்.

    இதனால் மன வேதனை அடைந்த வாலிபர், எலி மருந்து (வி‌ஷம்) குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 30-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வெளிமாவட்ட அரசு டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வாலிபரின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருநெல்வேலி, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் அதனை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் அருண்குமார், சந்திரசேகர் ஆகியோர் மதுரை வந்தனர். அவர்களுடன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜூலியானா, சதாசிவம் ஆகியோரும் பிரேத பரிசோதனை செய்ய தயாரானார்கள்.

    இந்த சூழலில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன், வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாகவும் வீடியோ ஒளிப்பதிவுக்கான பணிகள் முடிவடையாததாலும் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த சிக்கல் காரணமாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான வாலிபரின் உடல் இன்று பிற்பகலில் பிரேத பரிசோதனை செய்யப்படக்கூடும் என மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. #HIVBlood

    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாளை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    விசாரணையில் கர்ப்பிணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இந்த நிலையில் அந்த வாலிபர் மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.



    உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளது. எனவே பிற மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வாலிபரின் தாயார் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். பின்னர் அவர் எய்ட்ஸ் பாதிப்பில் இறந்த வாலிபரின் உடலை நெல்லை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியின் 2 தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மதுரை அரசு மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    அதுவரை எச்.ஐ.வி. கிருமிகள் பரவாமல் தடுக்க உடலை பாலித்தீன் கவரால் மூடி பாதுகாக்க வேண்டும். பிரேத பரிசோதனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை எச்.ஐ.வி. பாதிப்பில் இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை, நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறினார். #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் இன்று போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.



    இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று விருதுநகர் வந்தார். அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #HIVBlood #PregnantWoman

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் கூறினார். #HIV #HIVBlood #Pregnantwoman
    விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்களிடம் விசாரணை நடக்கிறது.

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சுகப்பிரசவம் நடந்தாலும் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #HIV #HIVBlood #Pregnantwoman

    ×