செய்திகள்

இந்தியப்பெருங்கடலில் மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தில் 2 நாட்கள் பரவலாக மழை பெய்யும்

Published On 2018-12-25 05:24 GMT   |   Update On 2018-12-25 05:24 GMT
இந்தியப்பெருங்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain
சென்னை:

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியையொட்டி இந்திய பெருங்கடல் வரை நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.

இதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.


இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

புதுவை, மரக்காணம், சீர்காழி, செய்யூர், மகாபலிபுரம், திண்டிவனம், வேதாரண்யம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், மேட்டூர், ஆலங்குடி, பரங்கிப்பேட்டையில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.  #IMD #TNRain
Tags:    

Similar News