செய்திகள்

ஐகோர்ட்டு உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Published On 2018-12-05 11:01 GMT   |   Update On 2018-12-05 11:01 GMT
ஐகோர்ட்டு உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். #JactoGeo
திருச்சி:

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழுவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட்டு கிளை போராட்டத்தை 10-ந் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோவை அறிவுறுத்தியது. அதன்பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், வெங்கடேசன், பொன் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் ஐகோர்ட்டு வழக்கு விபரம் , அரசு நிலைப்பாடு, அடுத்தக் கட்ட முடிவு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பான பொதுநல வழக்கு ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன்பு எங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்தோம். ஓராண்டாக அவர்களது கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் நீதிபதி கேட்டார்.

இதற்கு பதிலளிக்க அரசு தரப்பில் 10-ந்தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டது. அதனால் 10-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க ஜாக்டோ ஜியோவுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். நீதிபதியின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை ஒத்திவைத்தோம்.

தொடர்ந்து 10-ந்தேதி கோர்ட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு மீண்டும் அன்றே மதுரையில் கூடி நீதிபதி கருத்துக்கு பின்னர் ஆய்வு செய்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழக அரசு 7 அம்ச கோரிக்கையின் நிலைப்பாட்டை 10-ந்தேதி கோர்ட்டில் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
Tags:    

Similar News