செய்திகள்

ஓவேலி வனச்சரக அலுவலகத்தில் ஜன்னல்களை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்

Published On 2018-12-02 18:29 GMT   |   Update On 2018-12-02 18:29 GMT
ஓவேலி வனச்சரக அலுவலகத்தில் ஜன்னல்களை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்:

கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி, நாடுகாணி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. கூடலூர், தேவாலா, சேரம்பாடி தவிர மீதமுள்ள வனச்சரகங்கள் வனப்பகுதியின் கரையோரம் அமைந்துள்ளன.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதியில் ஓவேலி வனச்சரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று முன்தினம் இரவு வன காப்பாளர் சேகர், காவலர் மாறன், வேட்டை தடுப்பு காவலர் விக்னேஷ் ஆகியோர் பணியில் இருந்தனர்.

நள்ளிரவில் 9 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்கு வந்தது. தொடர்ந்து வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டது. இதை அறிந்த வன ஊழியர்கள் அலுவலகத்தின் உள்புறத்தில் பதுங்கி கொண்டனர். இதற்கிடையில் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள் அலுவலகத்தின் பின்புற வாசல் வழியாக கதவை திறந்து வெளியே ஓடினர். அப்போது அவர்களை காட்டுயானைகள் துரத்தின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக வன ஊழியர்கள் காட்டுயானைகளிடம் இருந்து தப்பினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் வன காப்பாளர் கிருபானந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர்(மற்றொரு குழு) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நள்ளிரவு 2 மணியளவில் காட்டுயானைகள் அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றன.

காட்டுயானைகளின் அட்டகாசம் அந்த பகுதியில் தொடர்ந்து வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி வன ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் பொதுமக்கள் இரவில் மிகுந்த கவனத்துடன் வெளியே சென்று வர வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

இதேபோன்று கூடலூர் பாண்டியாறு குடோன் அருகே முன்டக்குன்னு பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

மேலும் அங்குள்ள ராஜா என்பவரது வீட்டை சேதப்படுத்தின. காட்டுயானைகள் அட்ட காசம் தொடர்வதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News