செய்திகள்
கைதான ரஞ்சித், நோயல் எபினேஷ், மகேஸ்வரன்.

ஈரோடு வாலிபர்கள் 3 பேர் கொள்ளை வழக்கில் கைது

Published On 2018-12-01 10:26 GMT   |   Update On 2018-12-01 10:26 GMT
ஈரோட்டில் வாலிபர்கள் 3 பேரை பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
முத்தூர்:

முத்தூர் அருகே உள்ள அஞ்சூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 28). இவர் முத்தூரில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்டோ கண்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று இவர் நிறுவனத்தில் இருந்தார். மின் கட்டணம் செலுத்துவதற்காக அவர் வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த ரூ. 64 ஆயிரத்து 500 ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வெள்ளக்கோவில்-முத்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். இதை பார்த்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். ஆனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அந்த வாலிபர்கள் சென்றனர்.

இதையடுத்து உஷார் அடைந்த வெள்ளக்கோவில் போலீசார் முத்தூர் போலீஸ் காவலர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் காரர் சுரேஷ் பொதுமக்கள் உதவியுடன் அந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்தார்.

பின்னர் அந்த வாலிபர்கள் வெள்ளக்கோவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தான் ராஜேஷ்குமாரின் ஆட்டோ கண்சல்டிங் நிறுவனத்தில் ரூ. 64 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு வெண்டிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்த ரஞ்சித் (19), நோயல் எபினேஷ், மகேஸ்வரன் ஆகிய அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 64 ஆயிரத்து 500 பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் 2 லேப்-டாப்களும் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News