செய்திகள்

வேதாரண்யம் பகுதிக்கு 11 நாட்களுக்கு பின் மின்சாரம் வந்தது

Published On 2018-11-27 06:37 GMT   |   Update On 2018-11-27 06:37 GMT
11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. #GajaCyclone
சென்னை:

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த மாவட்டங்களில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள், 201 துணை மின் நிலையங்கள், 841 மின்மாற்றிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தற்போது எந்த அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

மின் வினியோகத்தை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளில் ஓரளவு முழுமையாக மின் இணைப்பு கொடுத்து விட்டோம்.

11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு 2 நாளில் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் முத்துப்பேட்டை நகருக்கு மின் இணைப்பு கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாளில் இருந்து அங்கு மின்சாரம் கிடைத்து விடும்.

திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிராம பகுதிகளில் 30 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

நிறைய வீடுகளில் மின் இணைப்பு சேதம் அடைந்திருப்பதால் 30-ந்தேதி வரை பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
Tags:    

Similar News