செய்திகள்

கஜா புயலால் முறிந்த மரங்கள் - கொடைக்கானல் செல்ல வாகனங்களுக்கு தடை

Published On 2018-11-17 09:30 GMT   |   Update On 2018-11-17 09:30 GMT
சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் கொடைக்கானல் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜாபுயல் நேற்று காலை நாகப்பட்டிணம் அருகே கரையை கடந்து திண்டுக்கல் மாவட்டத்தில் மையம் கொண்டது. இதனால் வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் சூறாவளி காற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

திண்டுக்கல் நகரின் பல பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்துவிழுந்தது. குடியிருப்பு பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் இருளிலேயே தவித்து வருகின்றனர்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கொடைக்கானல் நகர், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் ராட்சத மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்தன. பெரும்பாறையில் இருந்து சித்தரேவு வழியாக வத்தலக்குண்டு செல்லும் மலைச்சாலையில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் நடுவில் விழுந்துள்ளன.

இதேபோல் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலை, பழனி சாலையிலும் மரங்கள் ஆங்காங்கே முறிந்துவிழுந்துள்ளன. சில இடங்களில் பாறைகள் உருண்டும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானல் நகருக்கு செல்ல முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. காட்ரோடு, காமக்காபட்டி சோதனை சாவடிகளில் போலீசார் கொடைக்கானல் செல்லும் வாகனங்களை நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதேபோல் அனைத்து சாலைகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகனங்களை மலைச்சாலையில் அனுமதிக்கவில்லை.

கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களும் இயங்காததால் அவசர உதவிக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் கொடைக்கானல் நகரமே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்வினியோகத்தை சீரமைக்க ஒரு வாரமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைகிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News