செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு- அமைச்சர் உதயகுமார் தகவல்

Published On 2018-11-12 09:20 GMT   |   Update On 2018-11-12 09:20 GMT
வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரில் ரூ. 7 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 32 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடலோர மாவட்டங்களில் கூடுதலாக பாதுகாப்புகளை ஏற்படுத்த அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உள்ளது.

பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

4,399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேவைப்படும் பட்சத்தில் மத்திய பேரிடர் மீட்பு குழு பயன்படுத்தப்படும். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காற்றோடு மழை இருக்கும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எனவே மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்திகளை அவ்வப்போது கொண்டு சேர்ப்போம். ரெட் அலர்ட் என்பது அரசு நிர்வாகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
Tags:    

Similar News