செய்திகள்

கால்வாயில் குப்பை கொட்டும் 100 பேருக்கு தினமும் அபராதம் - கவர்னர் கிரண்பேடி உத்தரவு

Published On 2018-11-05 05:44 GMT   |   Update On 2018-11-05 05:45 GMT
தினமும் கால்வாயில் குப்பை கொட்டும் 100 பேருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்குமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

புதுச்சேரி:

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள புதுவை கவர்னர் கிரண்பேடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

புதுவையின் கிராமப்புற பகுதிகளில் 23 வாய்க்கால்களை சுமார் 84 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகர பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க கழிவு நீர் வாய்க்கால்கள், கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். பெரும் பாலும் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாமல் அடைக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி வாய்க்கால்களை ஆய்வு செய்த போதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் அடைத்து இருந்தது. இதனால், வாய்க்கால்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கும்படி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

 


ஆனால், இந்த அபராதம் விதிப்பு அமல் படுத்தப்படவில்லை. இதே நிலை தற்போதும் நீடிப்பது கவர்னர் கிரண்பேடியை கோபம் அடைய செய்துள்ளது. இதனால் தினமும் வாய்க்காலில் குப்பை கொட்டும் 100 பேருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்குமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுவை கவர்னர் மாளிகையில் பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோரை அழைத்து கவர்னர் கிரண்பேடி மழைக் கால பணிகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது ஊழியர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தூர்வாரப்பட்ட கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்கிறது. கால்வாயில் குப்பை கொட்டினால் திங்கள் முதல் அபராதம் விதிக்கலாம். நகராட்சி ஆய்வாளர்கள் இதை நடைமுறைப்படுத்தலாம். நாள்தோறும் 100 பேர் வரை இம்முறையில் அபராதம் விதிக்கலாம். குப்பை கொட்டுவோர் மீது அதிகளவு அபராதம் விதியுங்கள். இது இறுதி எச்சரிக்கை.

இவ்வாறு கிரண்பேடி அந்த பதிவில் கூறியுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

Tags:    

Similar News