செய்திகள்

தூத்துக்குடியில் மர்மக் காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-11-05 05:14 GMT   |   Update On 2018-11-05 05:14 GMT
தூத்துக்குடியில் மர்மக் காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

முள்ளக்காடு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தினி என்ற கர்ப்பிணி மர்ம காய்ச்சல் காரணமாக இறந்தார். பின்னர் கழுகுமலையை சேர்ந்த ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவ மனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அத்திமரப்பட்டி 56-வது வார்டுக்கு உட்பட்ட வேதக் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசிகாமணி. விவசாயி. இவரது மனைவி கெப்சிபாய். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் கெப்சி பாய்க்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே மர்மகாய்ச்சலுக்கு சிலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கெப்சிபாய் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். எனவே சுகாதாரத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தீவிர சுகாதார பணிகளை முடுக்கிவிட்டு தீவிர தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Swineflu #Dengue

Tags:    

Similar News