செய்திகள்

தவளக்குப்பத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரர் உள்பட 2 பேர் கைது

Published On 2018-10-27 11:55 GMT   |   Update On 2018-10-27 11:55 GMT
தவளக்குப்பத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்:

புதுவை ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது28), வேன் டிரைவர். இவரது தம்பி யோகேஷ் சென்னையில் தங்கி வேலைபார்க்கிறார். வாரவிடுமுறையில் நல்லாத்தூருக்கு வந்து செல்வார்.

அதுபோல நேற்று இரவு யோகேஷ் வீட்டுக்கு வருவதாக தனது அண்ணன் ராஜ்மோகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து யோகேசை அழைத்து வர ராஜ்மோகன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.

நோனாங்குப்பம் பழைய பாலம் என்.ஆர். நகர் அருகே வந்த போது 2 வாலிபர்கள் ராஜ்மோகனிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர். மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டதால் கை காட்டுகிறார்கள் எண்ணி ராஜ்மோகன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் கத்தியை எடுத்து ராஜ்மோகனின் கழுத்தில் வைத்து பணம்- நகைகயை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு ராஜ்மோகன் தன்னிடம் பணம் மற்றும் நகை எதுவும் இல்லை. தன்னிடம் செல்போன் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த செல்போனை பறித்து கொண்டு அவர்கள் அங்கிருந்து ராஜ்மோகனை விரட்டியடித்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜ்மோகன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், திருமுருகன் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கத்தியை காட்டி ராஜ்மோகனிடம் செல்போனை பறித்தவர்கள் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பரத் (26) மற்றும் நைனார்மண்டபம் புதுநகர் சோழன்வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (21) என்பதும் இவர்கள் இதுபோன்று உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பகுதிகளில் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 5 செல்போன்களும், 2 தங்க செயின்- தங்கமோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News