செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

Published On 2018-10-17 15:48 GMT   |   Update On 2018-10-17 15:48 GMT
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 9 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். இதற்கென சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு அதன் மூலம் நோயின் தாக்கத்தை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக கலெக்டர் சுப்பிரமணியனின் அறிவுரைப்படி சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 பேர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை, ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் உள்பட 10 பேரும் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலை கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனே நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிசிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். எந்நேரமும் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
Tags:    

Similar News