செய்திகள்

பூந்தமல்லி அருகே வடமாநில வாலிபர் பலி: 2 வாலிபர்கள் கைது

Published On 2018-10-16 10:27 GMT   |   Update On 2018-10-16 10:27 GMT
பூந்தமல்லி அருகே விரட்டிச் சென்ற போது வடமாநில வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் தாசப்ரகாஷ் சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் ஒரு வாலிபரை 2 பேர் சரமாரியாக தாக்கினர்.

வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அந்த வாலிபர் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அப்போது அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபரை 2 பேர் சரமாரியாக தாக்கியது பற்றி அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து வாலிபர் பலியானது தொடர்பாக எழும்பூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் விசாரணையை தொடங்கினர். எழும்பூர் உதவி கமி‌ஷனர் சுப்பிர மணி, இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் வடமாநில வாலிபரை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து எழும்பூர் சந்தோஷ் நகரை சேர்ந்த தேவன், கமல் என்கிற மதுரை முத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையின் போது, இருவரும் போதையில் ஹான்ஸ் போதை பொருளை கேட்டு தாக்கியதுடன், வடமாநில வாலிபரிட மிருந்து ரூ.3,500 பணத்தையும் பறித்ததும் தெரிய வந்தது. இதன் காரணமாக வழிப்பறி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவன், முத்து இருவரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக கமல் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடந்த போது சென்னையில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. அப்போது கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் இணை கமி‌ஷனர் ஒருவரின் வாகனம் தாக்குதலுக்குள்ளானது. அது தொடர்பான வழக்கே கமல் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. பலியான வாலிபரின் சட்டை பையில் ரெயில் டிக்கெட் ஒன்று இருந்தது. அதனை வைத்து அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை மட்டும் போலீசார் கண்டு பிடித்தனர்.

உயிரிழந்த வாலிபரை அடையாளம் காண்பதற்காக, அவரது போட்டோவை எழும்பூர் போலீசார் உத்தர பிரதேச போலீசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்த வாலிபர் யார்? என்பதை கண்டு பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

Tags:    

Similar News