செய்திகள்

தரடாப்பட்டு காலனியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2018-10-14 16:37 GMT   |   Update On 2018-10-14 16:37 GMT
தரடாப்பட்டு காலனியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு கிராம காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த காலனியில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டப்பட்டது. அதன் பின்பு இங்கு வாழும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இனி இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஆனால் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, கால்வாய் வசதி போன்றவை ஏதும் செய்யப்படவில்லை.

தரடாப்பட்டு காலனிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தரடாப்பட்டை சுற்றியுள்ள கண்ணகந்தல், நெடுங்காவாடி, கீழ்வணக்கம்பாடி, கரிப்பூர், கொழுந்தம்பட்டு ஆகிய கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக தரடாப்பட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் மருத்துவமனை சரிவர செயல்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவமனை சரிவர இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News