செய்திகள்
கைதான சந்தோஷ்குமார்

பாலக்கோடு அருகே பணம் மோசடி- கைதான போலி இன்ஸ்பெக்டர் தருமபுரி கிளை சிறையில் அடைப்பு

Published On 2018-10-13 11:32 GMT   |   Update On 2018-10-13 11:32 GMT
பாலக்கோடு அருகே பணம் மோசடி வழக்கில் கைதான போலி இன்ஸ்பெக்டர் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சுக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தர்மன். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 25). இவர் பி.எஸ்சி. கணிதம் படித்துள்ளார்.

இவர் தான் திருநெல்வேலியில் போலீஸ்  இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாகவும், அரசு உயர் அதிகாரிகள் தெரியும் என்றும் மாரண்டஅள்ளியை சேர்ந்த சுரேஷ் (24) என்பவரிடம் கூறியுள்ளார். மேலும் அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை லட்சம் வாங்கி உள்ளார்.

ஆனால் அவர் கூறியபடி சுரேசுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சுரேஷ், பலமுறை சந்தோஷ்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் சுரேசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தோஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலி இன்ஸ்பெக்டர் என்பதும், பல அரசு அதிகாரிகள் தெரியும் என்று கூறி மாரண்டஅள்ளி, பாலக்கோடு பகுதியில் பலரிடம் அரசு வேலை மற்றும் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போலீஸ் சீருடை, பேட்ஜ், பெல்ட் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை  பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி கிளை சிறையில்  போலீசார் அடைத்தனர்.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.
Tags:    

Similar News