செய்திகள்

குமரி மாவட்டத்தில் இன்று 86 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மறியல்

Published On 2018-10-10 16:42 GMT   |   Update On 2018-10-10 16:42 GMT
அனைத்து பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் 86 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். #SabarimalaTemple
நாகர்கோவில்:

கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் அனைத்து பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஊர்வலம், நாமஜெப ஊர்வலம், திருவனந்தபுரத்திற்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சியின் போது கேரள தேவசம் போர்டு மந்திரிக்கு எதிர்ப்பு என்று தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்திலும் இன்று அய்யப்ப சேவா சமிதி சார்பில் ஆர்ப்பாட்டம் - மறியல் போராட்டங்கள் நடந்தன.

நாகர்கோவில், தக்கலை, ராஜாக்கமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், பாரதிய ஜனதா நகர தலைவர் நாகராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர், அய்யப்பபக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோல நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் நடந்த மறியலில் பாரதிய ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மீனாட்சிபுரத்தில் பாரதிய ஜனதா முன்னாள் நகர தலைவர் ராஜன் தலைமையிலும், வடசேரியில் நகர பொதுச்செயலாளர் அஜித்குமார் தலைமையிலும், போராட்டம் நடந்தது.

தக்கலையில் தாலுகா அலுவலகம் எதிரிலும், திக்கணங்கோடு சந்திப்பு, திருவிதாங்கோடு தபால் நிலையம் அருகே பறைக்கோடு வைகுண்டபுரம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

இதேபோல ராஜாக்கமங்கலம் பகுதியிலும் மறியல் போராட்டம் நடந்தது. ராஜாக்கமங்கலம் சந்திப்பு, மேல சங்கரன்குழி சந்திப்பு, ஈத்தாமொழி சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் திரளான பாரதிய ஜனதா கட்சியினர் மற்றம் அய்யப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மண்டல தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல மார்த்தாண்டம் பஸ்நிலையம் முன்பு உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் தலைமையிலும், மேல்புறம் சந்திப்பில் மருதங்கோடு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சேகர் தலைமையிலும், களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு களியக்காவிளை நகர பாரதிய ஜனதா தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அய்யப்ப பக்தர்கள் அய்யப்பன் பாடல்கள் பாடியும், அய்யப்ப சரண கோ‌ஷம் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் பாரதிய ஜனதா, சிவசேனா, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சிவசேனா நகரத்தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். முருகன், முத்துசாமி, கனக ராஜன், சுடலைமணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News