செய்திகள்

துணை ஜனாதிபதி நாளை வருகை - காந்தி கிராமத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

Published On 2018-10-09 10:13 GMT   |   Update On 2018-10-09 10:13 GMT
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நாளை வருகை தருவதை முன்னிட்டு காந்தி கிராமத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சின்னாளபட்டி:

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு வருகை தருகிறார்.

கோவையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகம் வந்தடைகிறார்.

மதியம் 3.30 மணிக்கு பல்நோக்கு அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் 1300 பேருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

மேலும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு தங்க பதக்கங்களையும் 2 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்க உள்ளார்.

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை முதல் அம்பாத்துரை முதல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.

வெளிநபர்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அண்ணாநகர் உள்பட சில கிராம மக்கள் சென்று வருவது வழக்கம். அவர்களுக்கும் அனுமதி இல்லாததால் 2 கி.மீ. தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News