செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிரிப்பு - வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்

Published On 2018-10-08 13:06 GMT   |   Update On 2018-10-08 13:06 GMT
பழனி அருகே உள்ள வாய்க்காலை தூர்வாரக் கோரி விவசாயிகள் மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரினர்.
பழனி:

பழனி அருகே அ.கலையமுத்தூர் கிராமத்தில் உள்ளது ராஜ வாய்க்கால். இதன் மூலம் சுமார் 900 ஏக்கர் அளவுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த நிலங்களில் தற்போது விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

பாலாறு அணையில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் ராஜவாய்க்காலில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படாமல் செடிகள் முளைத்த நிலையில் இருப்பதால் நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ வாய்க்காலை தூர் வாரி தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர்.

இருந்தபோதும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிதி திரட்டினர். பின்னர் விவசாயிகள் தாங்களாகவே ஒன்றிணைந்து ரூ. 2 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் நாங்கள் பலமுறை பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் வாய்க்கால்களை தூர்வாரிய கோரி மனு கொடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. பருவமழையும் தொடங்கி விட்டதால் நாங்களே பணத்தை வசூலித்து வாய்க்கால்களை தூர்வாரி வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News