செய்திகள்

திருப்பூரில் 1½ வயது ஆண் குழந்தையை கடத்திய வட மாநில தம்பதி கைது

Published On 2018-10-05 09:48 GMT   |   Update On 2018-10-05 09:48 GMT
திருப்பூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் 1½ வயது ஆண் குழந்தையை கடத்திய வட மாநில தம்பதி கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பபிரான் பட்டயட் (வயது 28). பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு பபிரான் பட்டயட்டின் 1½ வயது மகன் உதய நாராயன் வீட்டு முன்பு உள்ள காம்பவுண்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென குழந்தை மாயமானது. இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பபிரான் பட்டயட் திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார். உடனடியாக துணை கமி‌ஷனர் உமா, உதவி கமி‌ஷனர் தங்கவேல், இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நீண்ட நேரமாக இங்கு சுற்றி திரிந்ததாகவும் அவர்கள் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல இருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சன்கர் சன் பேத்தி, இவரது மனைவி சுசித்ரா ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்ததும், தற்போது கோவை செட்டிப் பாளையத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இரவோடு இரவாக போலீசார் கோவைக்கு விரைந்து வந்து சன்கர்சன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு இருந்த 1½ வயது குழந்தை உதய நாரானனை மீட்டனர்.

பின்னர் கணவன்- மனைவி இருவரையும் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால் வளர்ப்பதற்காக குழந்தையை கடத்தியதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News