செய்திகள்

சுவாமிமலையில் வீட்டில் பதுக்கி வைத்த 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2018-10-01 11:32 GMT   |   Update On 2018-10-01 11:32 GMT
சுவாமிமலையில் கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்த 2400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

சுவாமிமலை:

சுவாமிமலை பகுதி சரவண பொய்கை தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது27). இவர் சுவாமிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக இன்ஸபெக்டர் ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காசியய்யா, ஏட்டு மாரியப்பன் மற்றும் போலீசார் இன்று காலை 8 மணியளவில் சரவண பொய்கை தெருவிற்கு சென்று வினோத் வீட்டருகில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது வினோத் மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியில் வரும்போது அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது வீட்டில் பின்புறம் நடத்திய சோதனையில் ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள் கொண்ட 50 அட்டைபெட்டிகளை போலீசார் கைப்பற்றினர். அதில் 2400 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையை ஒட்டி சுவாமிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வினோத் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டிகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News