செய்திகள்

வத்தலக்குண்டு அருகே வீடுகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்

Published On 2018-10-01 04:27 GMT   |   Update On 2018-10-01 04:27 GMT
வத்தலக்குண்டு அருகே வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் இரவு முழுவதும் தூக்கமின்றி பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர். #Rain #flood

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வறட்சியால் தவித்த நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு பகுதியில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டி காலனியில் இரவு முழுவதும் பெய்த மழையினால் திடீரென காட்டாற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இரவு நேரத்தில் தண்ணீரில் ஏதேனும் வி‌ஷ ஜந்துகள் இருக்கலாம் என்ற பயத்திலும் வீடுகளுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்திலும் தூக்கமில்லாமல் தவித்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

சின்னுப்பட்டி மற்றும் இதனை சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் மஞ்சளாறில் சேர வேண்டிய மழை நீர் அடைப்புகள் காரணமாக வீடுகளுக்குள் புகுந்து விட்டது.

பருவ மழை காலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாக இருந்ததால் இது போன்று மழை நீர் வீணாகி சாக்கடையில் கலந்து விட்டதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே அடுத்து வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக வாய்க்கால் அடைப்புகளை அகற்றி மழை நீரை முறையாக ஆறு மற்றும் குளங்களில் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். #Rain #flood

Tags:    

Similar News