செய்திகள்

தமிழகத்தில் 3-வது அணி நாம் தமிழர் கட்சிதான் - சீமான்

Published On 2018-09-24 10:10 GMT   |   Update On 2018-09-24 13:35 GMT
தனித்துப் போட்டியிடுகிற நாம் தமிழர் கட்சித்தான் தமிழகத்தின் 3 ஆவது அணி என நிருபர்களிடம் சீமான் கூறியுள்ளார். #NaamTamilarKatchi #Seeman
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துகோன் புகழ் வணக்கப் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

200 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சுதந்திர போராட்ட காலங்களில் சாதி, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக போராடினார்கள். ஆனால் இன்று சுதந்திர போராட்ட வீரர்களை சாதி தலைவர்களாக்கியது வேதனைக்குரியது. தமிழர்களுக்கு இனப்பற்று, மொழிப்பற்றை புகுத்தாமல், சாதிப்பற்றையும் மதப் பற்றையும் புகுத்திவிட்டார்கள்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூட கோவில்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. தமிழர்களை அடிமைப்படுத்தியது திராவிடக் கட்சிகளே. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து டாஸ்மாக்கில் கொள்ளையடித்து வருகிறார்கள். குட்காவுடன் சட்டசபைக்கு சென்ற ஸ்டாலின் ஏன் மதுவை கொண்டு செல்லவில்லை.

கர்மவீரர் காமராஜர் ஏராளமான பள்ளிகளை திறந்துவிட்டார். ஆனால் தற்போது உள்ள அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகிறது. தமிழக அரசு மத்திய அரசின் அடிமை அரசாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சீமான் நிருபர்களிடம் கூறுகையில்,” தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை. தனித்துப் போட்டியிடுகிற நாம் தமிழர் கட்சித்தான் 3 ஆவது அணியாக இருக்கும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். இடைத்தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்“ என்றார். #NaamTamilarKatchi #Seeman
Tags:    

Similar News