செய்திகள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு

Published On 2018-09-20 07:48 GMT   |   Update On 2018-09-20 07:48 GMT
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #HRaja #BJP
நாகர்கோவில்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் எச்.ராஜா மீது போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் எச்.ராஜா மீது புகார் செய்யப்பட்டது. கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் புகார் செய்தார்.

அந்த புகாரில் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலங்களை விற்பனை செய்வதாக அவதூறாக பேசி உள்ளார். மேலும் அதிகாரிகள் வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். இது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அவரது புகாரின் பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு பணி செய்ய இடையூறு ஏற்படுத்துதல்), மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே நேற்று சுசீந்திரத்தில் உள்ள திருக்கோவில்களின் தலைமை அலுவலகம் முன்பு கோவில் ஊழியர்கள் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏற்கனவே எச்.ராஜா விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஐகோர்ட்டையும், போலீசாரையும் அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #HRaja #BJP

Tags:    

Similar News