செய்திகள்

மயிலாப்பூர் கோவிலில் மயில் சிலை மாயம் - கோவில் அர்ச்சகர்களுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

Published On 2018-09-18 07:45 GMT   |   Update On 2018-09-18 07:45 GMT
அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை என்று கோவில் அர்ச்சகர்களுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #MylaporeKapaleeswararTemple #HC
சென்னை:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனதால், புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.



அப்போது, வாயில் பூவுடன் கூடிய மயில் சிலை காணாமல் போனதாகவும், ஆனால் தற்போது வாயில் பாம்புடன் இருப்பது போன்ற சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஆகமத்துக்கு எதிரானது எனவும் மனுதாரர் வாதிட்டார்.

கோவில் நிர்வாகத்தின் அறங்காவலர்களையும், செயல் அதிகாரியையும் நீக்கிவிட்டு, கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை மாயமானது, சிலை மாறிவிட்டது என்று அரசின் கவனத்துக்கு அர்ச்சகர்கள் ஏன் கொண்டு செல்லவில்லை? அது அர்ச்சகர்களின் கடமை தானே? இப்போது எல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை என்கிறபோது வேதனையாக இருக்கிறது என்றனர்.

அப்போது அறநிலைய துறை தரப்பில் ஆஜரான வக்கீல் மகாராஜா, இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். #MylaporeKapaleeswararTemple #HC
Tags:    

Similar News