செய்திகள்

போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் ரூ.2 ½ லட்சம் வழிப்பறி செய்த கும்பல்

Published On 2018-09-17 12:04 GMT   |   Update On 2018-09-17 12:04 GMT
கோவை மதுக்கரை அருகே போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் இருந்து ரூ.2 ½ லட்சம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பத்ரிபாலத்தை சேர்ந்தவர் சபீர் (வயது 43). இவரது தம்பி சுக்கூர் (23) மற்றும் இவர்களது நண்பர் மன்சூர் (33). இவர்கள் 3 பேரும் ஆடு, மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள்.

சம்பவத்தன்று ஆந்திரா சென்று வியாபாரிகள் அங்கு அறுவை மாடுகளை வாங்கினர். வாங்கிய மாடுகளை ஒரு லாரியில் ஏற்றி கேரளா புறப்பட்டனர். லாரி முன்னே செல்ல 3 பேரும் காரில் பின்னால் வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவையை கடந்து மதுக்கரை அருகே உள்ள சாவடிக்கு சென்றனர்.

அப்போது ஒரு போலீஸ் ஜீப்பில் இருந்து 5 பேர் கும்பல் இறங்கியது. காரை சைகை காட்டி கும்பல் நிறுத்தியது. போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் தன்னை இன்ஸ்பெக்டர் என்றும் மற்றவர்களை போலீஸ் என்றும் அறிமுகம் செய்தார்.

காரை சோதனை செய்ய வேண்டும் என்று காருக்குள் ஏறிய கும்பல் திடீரென மிளகாய் பொடியை அவர்கள் கண்ணில் தூவினர். கண்ணில் மிளகாய் பொடி பட்டதும் வியாபாரிகள் அலறித்துடித்தனர். அப்போது காரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் அதே காரில் அவர்களை கடத்தினர்.

கார் தமிழக எல்லையை கடந்து வாளையார் வனப்பகுதிக்குள் வந்ததும் அவர்களை அடுத்தடுத்து தள்ளி விட்டனர். பின்னர் கும்பல் அதே காரில் தப்பினர். வனப்பகுதியில் கிடந்த வியாபாரிகள் கண் எரிச்சல் குறைந்ததும் வாளையார் போலீசில் புகார் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் தமிழில் பேசினர். எனவே அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறியதின் பேரில் கோவை மதுக்கரை மற்றும் சாவடி போலீஸ் நிலையத்திற்கு வாளையார் போலீசார் தகவல் தெரிவித்தனர். தமிழக போலீசாருடன் தேடுதல் வேட்டையில் வாளையார் போலீசார் இறங்கினர். தீவிர தேடுதலில் வியாபாரிகளின் கார் கஞ்சிக்கோடு என்ற இடத்தில் அனாதையாக நின்றது. காரை இங்கு நிறுத்திய கும்பல் அவர்கள் கொண்டு வந்த ஜீப்பில் தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. தமிழக போலீசார் உதவியுடன் கேரளா முழுவதிலும் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News