செய்திகள்

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

Published On 2018-09-16 11:49 GMT   |   Update On 2018-09-16 11:49 GMT
திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. திண்டுக்கல்லில் மழை பெய்த போதும் வறட்சியே நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நல்லதண்ணிக்கேனி தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

சாக்கடைகள் தூர் வாரப் படாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என ஊழியர்களை அழைத்தால் அதற்கு ரூ.500 பணம் கேட்கின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களே.

ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் குடைப்பாறைப்பட்டி அருகே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்த தும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News