செய்திகள்

திருவாரூர் அருகே ஐம்பொன் பெருமாள் சிலையை கொள்ளையடிக்க முயற்சி

Published On 2018-09-15 11:46 GMT   |   Update On 2018-09-15 11:46 GMT
மர்மநபர்கள் ஐம்பொன் சிலையினை கொள்ளையடிக்க வந்தவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதி கண்கொடுத்தவணிதத்தில் ராஜகோபாலசுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. திருவிழா நேரங்களில் அனுமதி பெற்று பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு விழா முடிந்து மீண்டும் பாதுகாப்பகம் எடுத்து செல்லப்பட்டு வைக்கப்படும்.

இந்த கோவிலில் 2014-ம் ஆண்டில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருடம்தோறும் கும்பாபிசேக நாளில் வருடபூர்த்தி நிகழ்ச்சி நடைபெறும் நேற்று வருடபூர்த்தி நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பெருமாள் சிலை பாதுகாப்பகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை முடிந்து இரவு நேரமாகி விட்டதால் காலையில் பாதுகாப்பகத்திற்கு எடுத்து செல்லலாம் என்று கோவிலிலேயே சிலையினை வைத்துள்ளனர். பாதுகாப்புக்காக கோவில் ஊழியர் சக்கரபாணி மற்றும் பக்தர்கள் சிலர் அங்கேயே தங்கினர்.

இந்நிலையில் நள்ளிரவில் நேரம் சிலர் கோவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மநபர்கள் ஐம்பொன் சிலையினை கொள்ளையடிக்க வந்தவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிலை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திருவாரூருக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.

Tags:    

Similar News