செய்திகள்

ரபேல் விமான ஒப்பந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் - முகுல் வாஸ்னிக்

Published On 2018-09-14 21:49 GMT   |   Update On 2018-09-14 21:49 GMT
ரபேல் விமான ஒப்பந்த ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறினார். #MukulWasnik
கோவை:

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இந்த ஊழலை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரபேல் விமானம் வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இறுதியில் டசால்ட் என்ற பிரான்சு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு விமானத்தின் விலையும் ரூ.526 கோடியாகும்.

ஆனால் நரேந்திர மோடி பிரதமரானதும் 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டார். ஒரு விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு பதில் ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானங்கள் வாங்க ரூ.19 ஆயிரம் கோடி போதும். ஆனால் நரேந்திரமோடி போட்ட ஒப்பந்தம் மூலம் வாங்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கோடி வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

எனவே இந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த குழு இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் விசாரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசும்போது, ‘ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நடப்பது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி. இதனால் அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய மோடி பதவி விலக வேண்டும்’ என்று கூறினார். #MukulWasnik
Tags:    

Similar News